கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பசுமை
நிறைந்த நினைவுகளே ! என்ற பாடலில் ஓர் அருமையான வரி வரும் “வரவறியாமல் செலவுகள்
செய்து மகிழ்ந்திருந்தோமே“ ஆனால் எங்கள் விஷயத்தில் வரவுமில்லாமல் செலவுமில்லாமல்
மகிழ்ந்திருந்தோம். ஆம்! அந்த மூன்று
வருடங்களும் நட்பு நதியில் நீந்தி பிரிய சாலையில் நடந்து பாச பயணமாகவே கழிந்தது.
கடுப்பு அடிக்கும் நண்பர்கள் இருந்தும்
விடுப்பு எடுக்க விருப்பம் வந்ததில்லை!
படிப்பு எட்டாத உயரத்திலிருந்தும்
கல்லூரிக்கு வந்து போக விரும்பும் துடிப்பு மட்டும் குறையவேயில்லை...........!
காலையில் எழுந்தவுடன் கல்லூரி
நினைவும் எழுந்துவிடும். உற்சாகம் பீறிட்டு கிளம்பும்! என்ன சாப்பிட்டேன்? எப்படி
சாப்பிட்டேன்? என்பதெல்லாம் சுத்தமாக ஞாபகமில்லை..........! ஆனால் எத்தனை மணிக்கு பஸ் வரும்? எவ்வளவு நேரம்
பயணம்? எத்தனை ஸ்டாப்புகள் வரும்? எந்தெந்த ஸ்டாப்பில் எந்தெந்த நண்பர்கள்
ஏறுவார்கள்? கல்லூரி வரும் வரை என்னென்ன பேசுவோம்? என்னென்ன கிண்டல் அடிப்போம்
என்பதெல்லாம் இன்னமும் என்னுள் பசுமையாகவேயுள்ளது.
அதுவரை பி.காம்., பி.பி.ஏ என்று மட்டுமே கேள்விப்பட்ட நாங்கள் (அதாவது
சீனியும் நானும்) முதன் முறையாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அனுமதியுடன்
சவுராஷ்டிரா கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த பி.ஏ. கார்புரேட்
செகரட்டரிஷிப் என்னும் புது கோர்ஸ்ஸில் தான் சேர்ந்திருந்தோம். புது கோர்ஸ்
என்பதால் அட்மிஷன் ஆமைவேகத்தில் தான் நடந்துகொண்டிருந்தது. அட்மிஷன் நிரம்பாத காரணத்தால் எங்களுக்கு
வகுப்புகள் ஆரம்பிக்கப்படவேயில்லை.
வகுப்புகள் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறதே!
என்ற வருத்தம் துளிக்கூட இல்லாமல் அதிக உற்சாகத்துடன் கல்லூரியின் எழிலை
ரசித்துக்கொண்டு, தின்று விளையாடி இன்புற்று மகிழ்ந்திருந்தோம் எனது வாழ்க்கையின் வசந்தமான தருணங்கள்
அவைகள்.........! குழந்தையின் கையில்
கிடைத்த பொம்மை போல , வாலிபன் கையில் கிடைத்த மோட்டார் பைக் போல, பெண்கள் கையில்
கிடைத்த மேக்கப் சாதனங்கள் போல என் கையில் கிடைத்த கல்லூரி எனக்கு மிக மிக
உற்சாகத்தை தந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மாணவ நண்பர்கள் சேர
ஆரம்பித்தார்கள். எங்கள் துறையின் தலைவராகவும் கணக்குபதிவியல் பாடத்திற்கு
பேராசிரியராகவும் இருந்த திரு.சோ.சோ.மீனாட்சிசுந்தரம் அவர்களை முதல் முதலாக
சந்தித்தப்போதே மிகுந்த பெருமையாகயிருந்தது. கல்விக்கடலின் அறிவு அலைகள் அடிக்கும் அந்த
மாமனிதரின் வகுப்பெடுக்கும் தன்மையை இப்போது நினைத்தாலும் சீலிர்ப்பாகயிருக்கிறது....! அம்மாடி....
அவர் வகுப்பில் அடியெடுத்து வைத்ததும் ஏற்படும் ஒரு மரியாதை கலந்த நிசப்தம்
அவர் வகுப்பு முடித்து செல்லும்வரை அப்படியே நீடிக்கும்..... கேலி, கிண்டல் ம்....
ஹூம்! பாடம் நடத்தும் அழகு அவ்வளவு அருமையாகயிருக்கும். கர்வம் இருக்காது
கண்டிப்பு இருக்கும். கணக்குப்பதிவியலின் நெளிவு சுளிவுகளை தெளிவாக எடுத்து
சொல்வார். குட்டிக்குட்டி கதைகள் கூறி எங்களுக்குள் ஞானவிதைகளை விதைத்து
சென்றவர். அவர் வகுப்பெடுக்கும்
போதெல்லாம் மெஸ்மரிஸம் பண்ணப்பட்டது போல் .... கவனசிதறல் இல்லாமல் கவனித்துப்
படித்திருக்கிறோம். படிக்க வைத்திருக்கிறார்.
வாழ்க! அவர் புகழ்! அவரின் நினைவுகள் என்றும் என்
உள்ளத்தை விட்டு மறையாது, அவர்மேல் கொண்டுள்ள நன்றியும் மாறாது.....
மாணவ நண்பர்களின் எண்ணிக்கை கூட
ஆரம்பித்தது. ராமகிருஷ்ணன், மகாதேவன், நாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்,
வெங்கடேஸ்வரன், பாலசுப்ரமணியன், குமார், மேகநாதன், விஜயகுமார், பிரகாஷ், ராமசாமி,
குபேந்திரன், முருகேஷன், குழந்தைவேலு, ராஜகோபால், ஆனந்த் பால்ராஜ் என்று
நண்பர்களின் பட்டாளம் கூடியது. அப்புறம் எங்கள் பாடபிரிவையும் மதித்து தனியாக ஒரு
வகுப்பு ஒதுக்கினார்கள். எங்கள் ராஜ்ஜியம் ஆரம்பமாகியது. எனது அகராதியில் கல்லூரி என்பது நேசங்களின்
இணைப்பு.
சிலவாரங்கள் ஓடியது. பாடங்கள் ஒன்றும் பெரிதாக
நடத்தப்படவில்லை. நாங்களும் அதற்காக
பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பஸ் பயணம், மலைபாதை நடைபயணம், வகுப்பில் உற்சாக
உரையாடல்களென்று வாழ்க்கை ரொம்ப ஜோராக......... போய்க்கொண்டிருந்தது.
முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே
படிக்கும் கல்லூரியாகயிருந்தாலும் நாங்கள் 1st Batch
என்பதால் சீனியர்கள்
தொல்லையில்லாததால் எங்களுக்கு ராகிங்க் என்ற அனுபவமே ஏற்படவில்லை. எல்லாவிதத்திலும் ஆசீர்வாதம் செய்யப்பட்ட
மாணவர்களாக கல்லூரியில் வலம் வந்துக்கொண்டிருந்தோம்.
இந்த சமயத்தில் தான் ஒரு தீடிர்
திருப்பம் ஏற்ப்பட்டது. எங்கள் கனவிலும் எண்ணிப்பார்க்காத
ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது 1984 ம் வருடம் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள்
வழக்கம் போல் சீனி, ராமகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் நண்பர்கள் சகிதம் கல்லூரியின்
முகப்பு பகுதியில் முதல் மாடியிலிருக்கும் எங்கள் வகுப்புக்கு போவதற்காக படியேறி
திரும்புகிறோம் ......திகைத்து நின்றோம் .......!
ஆஸ்பத்திரியில்
வைத்திருப்பார்களே...அதுபோல் ஒரு மரத்தடுப்பொன்று எங்கள் வகுப்பிற்கு முன்னால்
வைத்திருக்கிறார்கள்..! எங்கள் அனைவருக்கும் ஒரே குழப்பம் .... என்ன இது! ஒருவேளை
மருத்துவ பரிசோதனை முகாம் எதுவும் நடத்தப்போகிறார்களா... என்று யோசித்தோம் . ஒன்றும் புரியவில்லை... இது போதாதென்று கல்லூரியின் மொத்த மாணவர்களும்
முதல் மாடியில் கும்பலாக நின்றுகொண்டு அந்த மரத்தடுப்பையே வெறித்துப்பார்த்தவண்ணம்
குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார்கள்.
இதைப்பார்த்ததும் எங்கள் திகில் இரட்டிப்பாகிவிட்டது... ஆஹா...! என்ன சோதனைடா ... இதென்று... இருந்தாலும் மனதை ஒருவாறு
திடப்படுத்திக்கொண்டு... மரத்தடுப்பைத்
தாண்டி வகுப்பிற்குள் நுழைந்தோம் எங்கள் கண்களை எங்களாலே நம்பமுடியவில்லை. ஒருவேளை
தவறுதலாக வேறு வகுப்பிற்குள் நுழைந்துவிட்டோமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. வேறு என்னங்க....... மருந்துக்கூட மாணவிகள்
தென்படாத அந்த மலைபிரதேசத்தில் தீடிரென்று எங்கள் வகுப்பில் மட்டும் குவியலாக மாணவிகளாக
அமர்ந்திருக்கும் காட்சியை கண்டால் எங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படியே கொஞ்ச
நேரம் சிலைபோல் நின்றுவிட்டோம் .
பரவசம் , படபடப்பு, பகீர் உணர்வு,
குபீரென்று கூச்சமான கூச்சம் அதீத உற்சாகம்
என உணர்ச்சி கலவைகளுடன் எப்படியோ உள்ளே நுழைந்து மாணவிகளின் பின்னால்
உட்கார்ந்துவிட்டோம். நண்பர்கள் அனைவரும்
வாய்கொள்ளாத சிரிப்புடன் அடுத்த என்ன பேசவென்று தெரியாமல் வெறுமென
சிரித்துக்கொண்டேயிருந்தோம். அய்யோ
..... அய்யோ......
மாணவிகள் மத்தியில் நாங்கள் மான்கள்
போல் மருண்டு போய் என்ன செய்வதென்று அறியாமல் உட்கார்ந்திருந்தோம்.
நினைவுகள் இன்னும் உலா வரும்........
இவை நண்பர் க்ருஷ்ணமூர்த்தி மற்றும் தோழி விஜியின் உரையாடல்கள் (நான் மிகவும் ரசித்தவை):
ReplyDelete1.EDITOR :-)6 August 2012 13:47
மன்னிக்க வேண்டும். நான் வகுப்பிற்கு தாமதமாய் வருவது போலவே, Admission கிடைக்கவும் தாமதமாகி, பெங்களூர் சுற்றுலா சென்று விட்டு தாமதமாகத்தான் சேர்ந்தேன். அப்பொழுதே, தோழிகள் வந்து இருந்தார்கள். அதனால் எனக்கு மரத் தடுப்பு இல்லை.
ஹி ஹி ஹி
கிருஷ்ணமூர்த்தி K
VJ6 August 2012 20:29
ஆமாம் என்னவோ நீங்க காலேஜில் சேரும்போது உங்களுக்காக ஸ்பெஷலா தடுப்பை அகற்றினாற் போல், அய்யே, என்ன ஒரு வழிசல்!! இதுக்கு பேரு என்னப்பா, ஜொள்ளா, லொள்ளா??
2.EDITOR :-)6 August 2012 13:49
நாகராஜன் அவர்கள் மிகவும் தாமதமாகத்தான் சேர்ந்தார் என்று என் ஞாபகம். சரித்திரத்தை மாற்றினால் இந்த மன்னனிற்கு கோபம் வரும் ஜாக்கிரதை.
கிருஷ்ணமூர்த்தி K
3.VJ6 August 2012 15:46
உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு ஷொட்டு!!
ஆமாம், மங்கையரைத்தான் மான் போல மருண்டாள் என்று வர்ணித்ததாக படித்திருக்கிறேன்! மங்கையர் மத்தியில் மாணவர்கள் மருண்டு இருந்ததை இன்று தான் அறிந்தேன்!! ம் ம்... போகட்டும்! அந்த கணம் மாணவிகளின் மன நிலை என்னவாயிருந்தது என்று அறிந்தால் இன்னும் சுவை சேர்க்கும்.
சிறியவன்6 August 2012 18:01
இத மாணவியரான நீங்கதான் சொல்லனும். அன்வருக்கு ஸ்ப்ளிட்/multi personality ஒன்னும் கெடையாது, எனக்குத் தெரிஞ்சு :-)
சிறியவன்6 August 2012 18:08
இவன் ஆண் கலை(ஞர்) மான் இல்லையா? அதுதான் மருண்டு போயிட்டான், இப்பயும் அப்படித்தான். ஹி ஹி ஜொள்ளு.
VJ6 August 2012 19:50
சக மாணவிகளின் மன நிலையை தெரிந்து கொள்வதற்கு multi personality ஆகவோ split personality ஆகவோ இருக்கணும்னு அவசியம் இல்லை, just ஒரு survey எடுத்தால் போதும். ஆனாலும் இந்த கிண்டல் தானே வேண்டாங்கறது.
சிறியவன்7 August 2012 11:45
நாம் படிக்கும் காலத்தில் ஒரு சினிமாப் பாடல் உண்டு, "ஆறும் அது ஆழமில்ல, ஆழ்கடலும் ஆழம் இல்ல, ஆழம் எது அய்யா அது/அந்த பொம்பள மனசுதான்யா" ராஜா பாடினது, ஞாபகம் இருக்கா? அதனால survey எல்லாம் சரிப்பட்டு வராது.
4.VJ6 August 2012 15:50
ஏதோ ஆர்வ மிகுதியில் எல்லா நண்பர்களின் பெயரையும் விடுபட்டு போக கூடாதே என்று எழுதி இருக்கலாம். அதுவும் நாகராஜன் போன்ற நண்பனின் பெயரை விடுவதா? இதைப்போய் பெரிது படுத்திக் கொண்டு...
சரி, நாகராஜனிடமே கேட்கலாமே?
சிறியவன்6 August 2012 17:59
History is more important, It may lead to wrong stories like our indian History. So I am very strictu! strictu!! stritu!!!
சிறியவன்6 August 2012 18:04
Nagarajan joined while we were at Big room which is near to Vice Principal's room. Before that we were at small room near to VP's room and another one near library. நான் காலேஜுக்கு மட்டம் போட்டவன்தான், ஆனால் இதெல்லாம் ஞாபகமும் இருக்கு
VJ6 August 2012 20:40
நாம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்போது மற்றொரு விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறோம், பார், பழசை ஞாபகப்படுத்துகிற ஜோரில் காலேஜுக்கு மட்டம் போட்டது எல்லாம் வெளியே வந்து விட்டது.
மேலும் தான் மட்டம் போட்டாலும் காலேஜில் நடந்த வம்புகளை சேகரிப்பதில் ரொம்ப கவனமா இருந்திருக்கீங்கனும் தெரிய வருது