Tuesday, 2 October 2012

ரத்த தானம்!!

கல்லூரியில் படிக்கும் காலங்களில் பணம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.அவற்றின் முக்கியத்துவமும் அவ்வளவாக தெரியவில்லை.காலை எழுந்தவுடன் துடிப்பு...! பின்பு கலகலப்பாயிருக்கும் எங்கள் கல்லூரி.... மாலை முழுவதும் அதன் நினைப்பு...! என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் எதிர்காலம் கடந்தகாலம் என்பதெல்லாம் தேவையற்ற சமாச்சாரங்களாக அப்போது தோன்றியது. காலையுணவு வீட்டில் முடிந்துவிடும்.பஸ் பாஸ் இருப்பதால் போய் வருவதற்கான பயண செலவு கிடையாது.  மத்தியானத்திற்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கொண்டுவந்துவிடுவதால் கேண்டின் செலவு கிடையாது.
ஆகவே மொத்தத்தில் பாக்கெட் மணி அப்படிங்கிற விஷயமே இல்லாத ஒன்றாக இருந்தது.


மதிய உணவு நண்பர்கள் சகிதம் பகிர்ந்துண்டு சாப்பிடுவதுதான் வழக்கம்.  அந்த சமயங்கள் ஒவ்வொன்றும் இதமானவை இனிதானவை.  நண்பர்கள் வீட்டில் செய்யப்படும் விதவிதமான சாப்பாட்டு வகைகள் எல்லோர் மத்தியிலும் பகிர்ந்துண்ணப்படும்.  சீனிவாசன், ரமேஷ், ராமகிருஷ்ணன் கொண்டுவரும் விதவிதமான கூட்டுவகைகள், பொரியல் வகைகள், கலவை சாதங்கள் எல்லாம் எனக்கு உணவின் மீதுள்ள விருப்பத்தை அதிகரிக்கும் வண்ணம் இருந்தன. ரமேஷ் கொண்டுவரும் கத்திரிக்காய் பொரியல் “first class’  ஆக இருக்கும். அளவான உப்பும் மசாலாவும் தடவி எண்ணெயில் பொன் வறுவலாகப்பொரித்து பிறை வடிவிலிருக்கும் அந்த கத்திரிப் பொரியலை எடுத்து ஒரு கடி கடிக்கும் போது நாக்கில் ஊறும் சுவையிருக்கிறதே .....ஆஹா....! அமிர்தமாயிருக்கும். எனது இந்த ரசிப்புத்தன்மையை நன்றாக உணர்ந்துகொண்ட அவனும் எப்ப இந்த பொரியலை கொண்டு வந்தாலும் உடனே எனக்குத்தான் முதலில் கொடுப்பான். அதற்கான முன்னறிவிப்பையும் காலையிலே செய்து ஆவலை அதிகரிக்க வைப்பான். அவ்வப்பொழுது தோழிகளின் (பாலா, சாந்தி, விஜி, ஞானி, சித்ரா) உணவுகளும் பகிர்ந்துக்கொள்ளப்படும்.  ஆனால் அவர்கள் கொண்டுவரும் டிபன்பாக்ஸ் அளவுதான் எங்களுக்கெல்லாம் ஏராளமான தயக்கத்தை ஏற்படுத்தும். கர்சிப்பில் மடித்து உள்ளங்கையில் வைத்துக்கொள்ளுமளவிற்கு தக்குணுண்டு டிபன்பாக்ஸ்களை கொண்டுவருவார்கள். இந்த சின்ன அளவிலும் கடைகளில் டிபன்பாக்ஸ்கள் விற்கும் என்பதை நினைத்து பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு சவால் விடுவதுபோல் மகாதேவனும் அதேபோல் பொடி டப்பா சைஸிற்கு டிபன்பாக்ஸ் எடுத்துவருவான். இதற்கெல்லாம் விதிவிலக்கு நாகராஜன் மட்டும்தான். எப்பவுமே வீசின கைதான்.  கல்லூரியிலிருந்த மூன்று வருடங்களுமே அவன் டிபன்பாக்ஸ் கொண்டுவந்ததே கிடையாது. உண்பது நாழி என்பதற்கு வாழ்வியல் உதாரணமாக வாழ்ந்துகாட்டியவன். தோழிகளெல்லாம் அவனுக்கு ‘food sharing’ அனுப்புவதில் குறிப்பாகயிருப்பார்கள். மற்ற தோழியர்கள், தோழர்கள் அவர்களுக்குள் ஒவ்வொரு கூட்டமாக இணைந்து சாப்பிட்டுகொள்வார்கள். கிரிதரன் பெரும்பாலும் சீனியர் மாணவர்களுடன் தான் சாப்பிடுவான்.

மதிய சாப்பாடு முடிந்து கைகழுவிவிட்டு அடுத்து வகுப்பு ஆரம்பிக்கும் வரையுள்ள சமயத்தில் எலலாவிடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விருட்சங்களுக்கு மத்தியில்  விடையில்லா கேள்விகளோடு பேசிக்கொண்டே விளையாட்டு மைதானம் வரை நடந்து செல்வோம். சிலசமயம் தோழிகளுடன் அவ்வாறு செல்லும் சமயங்களில் மற்ற வகுப்பு மாணவர்கள்  எழுப்பும் பொறாமை மற்றும் இயலாமை கலந்த கூக்குரல்கள் எங்களை பிண்ணணி இசையாக தொடரும். ஆனால் இங்கு முக்கியமாக ஒன்றுமட்டும் சொல்லவேண்டும்.  மற்ற வகுப்பு மாணவர்கள் எத்தனையோ கிண்டல் கேலிகள் பண்ணியும் அதைப்பெரிதுபடுத்தாமல் எங்கள் வகுப்பு தோழியர்கள் மிக நாசூக்காக சமாளித்து வருடங்களை நகர்த்தினார்கள். அதேபோல் அவர்களும் ரொம்ப புண்படும் வகையிலும் எல்லை மீறி நடந்துகொள்ளவில்லை.  காரணம் கல்லூரிமுதல்வர், துறைதலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை கண்டு எல்லா மாணவர்களுக்குமே இருந்த மரியாதை கலந்த பயம் தான். ரத்தப்பந்தங்களுக்கு இணையான பிணைப்பாக கல்லூரி தோழமைகள் மாறிபோயின.

ரத்தப்பந்தங்கள் என்றவுடன் எனக்கு முதன்முதலில் நான் கல்லூரியில் கொடுத்த ரத்தத்தான அனுபவம் ஞாபகத்திற்கு வருகின்றது.  பள்ளிப்பருவத்தில் ரத்தத்தான முகாம்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ரத்த தானமெல்லாம் கொடுத்ததில்லை. ஒருசமயம் எங்கள் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதற்கான விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் கொடுக்கலாமென்று ஒவ்வொரு வகுப்பிற்கும் சுற்றறிக்கை வந்தது. அன்னதானம் கொடுக்கவோ ஐஸ்வர்ய தானம் கொடுக்கவோ வழியில்லாத அந்த மாணவப்பருவத்தில் உன்னதமான தானமான ரத்த தானம் கொடுக்கலாமே என்பதை நிதானமாக யோசித்து மனப்பூர்வமாக பெயர் கொடுத்தேன். பெயர் கொடுத்த மாணவர்களெல்லாம் பேராசிரியர்களின் பெர்மிஷன் பெற்று கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அந்த அறையில் ஆஸ்பத்திரிகளில் போடப்பட்டிருப்பது போன்ற சில கட்டில்கள் விரிக்கப்பட்டிருந்தன.  ஒன்றிரண்டு கட்டில்களில் மாணவர்கள் படுத்தவண்ணம் டுயூப் மற்றும்  பாட்டில் உதவியுடன் ரத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த அறைமுழுக்க ஒரு வித மயக்கமான மருந்துவாசனை அடித்துக்கொண்டிருந்தது. ரத்த தான முகாமிற்கு அமைப்பாளராகயிருந்த ஒரு பேராசிரியரால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டேன். ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் முடிந்த பிறகு ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டேன். வெண்மையான துணிவிரிக்கப்பட்ட வெள்ளை நிறக்கட்டில், வெள்ளையாக வெறுமையாகயிருக்கும் டுயூப் செருகப்பட்ட வெளிர் நிற பாட்டில், விவரிக்க முடியாத மருந்துவாசனை என்று பார்த்ததும் ஒருவிதமான நெருடலான உணர்வு உடலெங்கும் பரவியது. ஒரு கையை நேராக்கி பெரிய பச்சை நரம்பாகத்தேடி சுருக் கென்ற வலியுடன் ஊசி பொருத்தப்பட்டிருக்கும் டுயூப்பை இணைத்தார்கள். அப்புறம் எந்த வலியுமில்லை. இதயத்துடிப்பு சீராகயிருந்தது... மனசு மௌனமாக இருந்தது.... மொத்த அறையிலும் நிசப்தம் குடிகொண்டிருந்ததால் தியானத்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன். கொஞ்ச நேரம் கழிந்ததும் ஊசியுடன் கூடிய டுயூப் கையிலிருந்து உருவி எடுக்கப்பட்டு எழுப்பி உட்கார வைக்கப்பட்டேன். அப்பாடா... சோதனை தாண்டி சாதித்தது போல் ஓர் சந்தோஷம் ..! உள்ளமெங்கும் பரவியது. பேராசிரியர் முதுகில் தட்டிக்கொடுத்தார். பெருமை பூரிக்க நம்ம ரத்தம் எப்படியிருக்கும் ..? பார்க்கலாமே....என்ற ஆவலில் கட்டிலுக்கு அருகாமையில் இருக்கும் பாட்டிலைப்பார்த்தேன்....! கருஞ்சிவப்பு வண்ணத்தில் பாதிபாட்டிலுக்கும் மேல் அதிகமாகயிருந்த ரத்தத்தைப்பார்த்ததும் கண் இருள ஆரம்பித்தது. கைகளும் கால்களும் இலேசாகி ....தலை சுற்றி......வியர்த்து.....உட்கார சக்தியின்றி .....பொலபொலவென...... படுக்கையில் சரிந்தேன்.  அவ்வளவுதான் ....அந்த அறையின் நிசப்தமெல்லாம் ஏகத்திற்கு மாறிபோனது. டாக்டர் ஒருவர் வந்தார், தட்டிக்கொடுத்த பேராசிரியர் தடுமாற்றத்துடன் படுக்கையின் பக்கம் வந்து என் கன்னங்களைத்தட்டி மயக்க நிலையிலிருந்து எழுப்பினார். ஐந்தாறு மாணவர்கள் தடதடவென்று ஓடிவந்தனர்.  கவலையோடும் பதட்டத்தோடும் வேகவேகமாக ஆரஞ்சு பழங்களை உரித்து சுளைகளை எனக்கு ஊட்டினார்கள்.  ஆப்பிள் வெட்டி கொடுத்தார்கள்.  அவைகளை சாப்பிட.... சாப்பிட.... தெம்பு வந்தது. தாயினும் சாலப்பரிந்து கவனித்தார்கள். எழுப்பி உட்காரவைத்து ஜூஸ் கொடுத்தார்கள்.  உடம்பெங்கும் சக்தி பரவ ....! உள்ளார்ந்த பாசத்துடன் அவர்களிடம் விடைப்பெற்று வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


இன்னும் உலா வரும்......

9 comments:

  1. உங்க உப்பை தின்னு வளந்த உடம்பு

    ReplyDelete
  2. சமைக்கிறதுக்குள்ள என்ன அவசரம் நாகு?

    ReplyDelete
  3. அட பழச சொல்றேன்பா

    ReplyDelete
  4. பாத்துக்க சீனி அறியாதவன ரெண்டு ஆரஞ்சு சுளைக்காகவும்,துண்டு ஆப்பிளுக்கும் என்ன பண்ணியிருக்கான்னு

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துக்கும் நீதான் role model னு அவன் சொல்றானே, இந்த ஆரஞ்சு சம்பவத்துக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லையா? சம்பந்த மூர்த்தி தெருவில் வசித்தோனே?


      Delete
    2. அதுக்காக இப்படியா? வாழ்க்கைய எதுக்கு பணயம் வைக்கிறதுன்னு ஒரு இது வேண்டாம்

      Delete
  5. adapaavigala oru nalla thuvakkam avanukku kidachathu ennala, andha kirukiruppu avan rathatha paathathaala mattum illa orange udane kodukkalennuthaan

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா இது? சம்மன் இல்லாம ஆஜராகுரது

      Delete
  6. நாங்கள் Food sharing செய்யாவிட்டாலும் நாகுவுக்கு கவலையில்லை, தேவைப்பட்டால் அவனே எடுத்துக்கொள்வான். அவ்வளவு உரிமை!!

    ReplyDelete

Link