கல்லூரி வாழ்க்கையின் இனிமைகளை பலமுறை
நண்பர்களுடன் பேசியிருக்கிறேன்.
பகிர்ந்திருக்கிறேன். ஆனால் முதல்முறையாக
இப்போதுதான் எழுத்தில் பதிவு செய்கிறேன். அதனால் ஒரு வரலாற்றுப்பதிவு போல்
கோர்வையாக சம்பவங்கள் நடந்த காலவரிசைப்படி எழுதவது என்பது கொஞ்சம் கடினமாகயுள்ளது.
மேலும் பிடித்த விஷயங்கள் தானே உடனே ஞாபகத்திற்கு வரும். ஆகவே
கடந்தப்பதிவில் எனது வகுப்பின் யுவ
நண்பர்கள் அனைவரையும் அறிமுகம் செய்யும் வகையில் அத்தனை பேர்களையும் வரிசையாக
குறிப்பிட்டுவிட்டேன். ஆனால் அவர்களில் கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன் இவர்களெல்லாம்
மாணவிகளின் வருகைக்குப் பின்னர் வந்தவர்கள். ஆகவே அவர்கள் எங்களைப் போல் மருண்டு
போகாத மாபாக்கியசாலிகள் (ஞாபகமூட்டி தலையில் குட்டிய தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு
நன்றி....).
மாணவிகளின் வருகை எங்கள் கல்லூரி
வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகப்போய்விட்டது. அண்டா பாலுக்கு அரைகிளாஸ்
ஜீனி வைத்ததுபோல்...! அவ்வளவு பெரிய ஆண்கள் கல்லூரியில் எங்கள் வகுப்பிலிருந்த
மாணவிகள் மிகப்பெரிய ஈர்ப்புசக்தியாக மாறிவிட்டார்கள். காலை, மதியம், மாலையென்று
எப்போதும் நாங்களிருக்கும் முதல் மாடி ஜே...... ஜே.... வென மாணவ கண்மணிகளின்
கூட்டத்தால் நிரம்பி வழியும். தினமும் திருவிழா தான்.......
எங்களுக்கு சீனியர் மாணவர்களிடையே
மிகப்பெரிய வரவேற்பிருந்தது. பஸ்ஸில் வரும்போதும், நடந்துவரும்போதும், கேண்டின்
போகும் போதும், பாத்ரூம் போகும் போதும், கல்லூரியின் எந்தப்பக்கம் போனாலும்
புதுப்புது மாணவர்கள் எங்களை அணுகிய வண்ணம் நட்பு மழையை பொழிந்தவண்ணமிருந்தார்கள்.
அந்த நட்பெல்லாம் பெரும்பாலும் மாணவிகளைப்பற்றிய விசாரணையாகத்தான் இருக்கும்.
பேராசிரியர்கள் கூட கொஞ்சம்
தடுமாற்றத்துடன் தான் பாடங்கள் எடுத்தனர். நாட்கள் ஜெட் வேகத்தில் சென்றது.
பாடங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. எங்கள் பிரிவின் பாடத்திட்டத்திலுள்ள
பாடங்கள் B.Com, B.B.A வை விட அதிகமாகயிருந்தது அதேசமயத்தில்
கடினமாகவுமிருந்தது. மாணவிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தோழிகளாகப் பரிணமிக்க
ஆரம்பித்தார்கள். முதன்முதலாக நான் பேசிய அல்லது என்னிடம் பேசிய தோழி யார்? என்பது
ஞாபகமில்லை.
நான் அடிக்கடி குறிப்பிடும்
நாங்களென்பது நான் அதாவது அன்வர் உசேன், சீனிவாசன், நாகராஜன், மகாதேவன் அவர்கள்
தான்..! ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி இவர்களுடன் பூர்வஜென்ம தொடர்பு போல இனம்புரியாத
தோழமையிருக்கும். ஆனால் எங்களை போல் அல்லாமல் அவர்கள் இருவரும் அனைத்து
நண்பர்களிடமும் பொதுவாக நடந்துகொள்வார்கள். நாங்கள் சிலருக்கு சிரிப்பை
உண்டாக்கி.... சிலருக்கு எரிச்சல் உண்டாக்கி...
பலருக்கு புரியாத நட்பு இலக்கணத்தோடு சும்மா....! செம ஜாலியோடு கல்லூரி
வாழ்க்கையில் மூழ்கி திளைத்தோம்...!
மனம் நிறைய தினம் தினம் வார்த்தை
விளையாட்டுகளில், ஜோக்குகளில், கேள்விகளில், பதிலுக்குப்பதில் கிண்டல்களில்,
ஆச்சரியமான பதில்களில், ஆதரவான அணுகுமுறைகளில், அந்நியோன்னியமான நட்பில், ஆரவாரமான
சிரிப்புகளில், பேராசிரியர்களையும் கவர வைத்த பண்பில், எந்த சமயத்திலும் உற்சாகமாகவே
கழிந்த கணங்களென்று கல்லூரியின் வாசமெல்லாம் நேசமாகவே கழிந்தது.
தோழர்களின் தோழமை போலவே தோழிகளின்
தோழமையும் எங்கள் இனிமைகளை கூட்டியது. நண்பர்கள் வட்டம் மடமடவென்று சேர்ந்தது போல்
தோழிகளின் வட்டம் சேரவில்லை ரப்பர் தோட்டத்தில் பால் சேகரிப்பது போல்
துளித்துளியாகத் தான் தோழிகளை தேர்வு செய்யமுடிந்தது. காரணம் மொத்த கல்லூரியும் அவர்கள்
பின்னாடி தான் இருந்தது. அவர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்ததால்....!
அவர்களுக்கு நாங்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரிந்திருக்க மாட்டோம்.... என்று
நினைக்கிறேன். என்னதான் அக்கரை புல்வெளி அழகு பச்சையாக தெரிந்தாலும் .... இக்கரை
புல்வெளியில் தானே நடைபயின்றாக வேண்டும் ....!
ராஜேஸ்வரி, பானுமதி, பாலா அம்புஜம்,
சாந்தி, விஜி, சித்ரா, ஞானேஸ்வரி, ஜெயலலிதா, லலிதா, நளினி, ராஜஸ்ரீ, உஷாமாய்,
ஷகிலா, மேகலா, ரமீலா, M.L.விஜயலட்சுமி, செந்தாமரை, அனிதா, சந்திரா, லட்சுமி
புவனேஸ்வரி, விஜயலட்சுமி, ஜெயலட்சுமி என்று தோழிகள் வட்டம் உருவாவதற்குள் வருடம்
உருண்டோடிவிட்டது. அப்படி உருவான தோழிகள் அத்தனை பேரும் ஒரேமாதிரி பழக தயாராகயில்லை.
நமது பாரததேசம் போலவே தோழிகளும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அவர்களுக்குள்
பெரும்பாலும் பிரிந்தே செயல்பட்டார்கள். படிப்ஸ், பந்தாஸ், பசைஸ், பொம்மைஸ், யோகிஸ்,
பாவம்ஸ் என்று பல பிரிவுகளாக இருந்தார்கள். அத்தனை குழுக்களிடமும் நாங்கள் சரிசமமாக
பழகவில்லையென்றாலும் அனைவரிடமும் ஓரளவிற்கு பழகி நட்பை வளர்த்திருந்தோம்.
தோழிகள் என்று சொல்லும் போது எங்கள்
பேராசிரியை திருமதி.சாந்தா மேடம் அவர்களையும் முக்கியமாக குறிப்பிடவேண்டும். அவர்களிடம்
எங்கள் நட்பு க.கா க.கா.பி என்று
இருமாறுபட்ட விதத்தில் இருந்தது. ஆமாம்...! எங்கள் கல்லூரி காலத்தில் பொரிந்து
கொண்டும் கல்லூரி காலத்திற்கு பின்னால் பரிந்து கொண்டும் பழகினார்கள்.
ஆரம்ப காலத்தில் சாந்தா மேடம்
அவர்களின் கண்டிப்பான அணுகுமுறையிலும் கடகட ஆங்கிலத்திலும் அரண்டு போனோம்
அரண்டு........! + 2 வரை நடைவண்டி
ஆங்கிலம் கேட்டுவிட்டு சாந்தா மேடத்தின் எக்ஸ்பிரஸ் வேக ஆங்கிலத்தில் என்
எக்ஸ்பீரியன்ஸே பூகம்பமானது. அவர்கள்
எடுத்த பாடங்களும் கடவுளே.... மிகமிக கசப்பானவைகள் Principles of Law
என்ற பெயரை கேட்டாலே எனக்கு பேதியும் பீதியும் வந்தது. ஆண்டவரை அல்லும் பகலும் துதித்ததெல்லாம்..... அந்தப்பாடத்தில்
எப்படியாவது பாஸாகி விட வேண்டுமென்பதற்கு தான்........! அம்மாடி........ விஷம்
போல் இருந்த அந்தப்பாடத்தை மேடமும் முழுக்க முழுக்க நஞ்சு மொழியிலே நடத்தியதால்
அவர்களை பார்த்தாலே சந்தோஷமெல்லாம் விடமாகி விடும்.
ஆனால் அதே மேடம் கல்லூரி காலம்
முடிந்தபிறகு எங்களிடம் பரிவாக பழகியவிதம் மிகுந்த ஆச்சரியத்திற்குரியது! எங்களை
காணும் தோறுமெல்லாம் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி கன்றினுக்கு சேதா
கனிந்திரங்கல் போல........ எங்களுக்கு இரங்கி மிகுந்த நேசத்துடன் பழகினார்கள். அன்பை
தவிர வேறெந்தவிஷயமும் இங்கு நிரந்திரமில்லை என்பதுதான் உண்மையான உண்மை.
இன்னும் மலரும்..........


நிச்சயமாக attendance எடுத்திருக்கணும்னு நினைக்கிறேன். இல்லைன்னா எப்படி அத்தனை பேரும் நினைவிருக்க முடியும்.
ReplyDeleteJust kidding!
Amazing!!
Kudos to your memory!!!