Monday, 10 September 2012

நட்பின் அறிமுகம்!!


கல்லூரி காலங்களில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் என் நண்பர்களை டேய்....., போடா......, வாடா.......... என்று ஒருமையில் அழைப்பதுதான் ரொம்பப்பிடிக்கும். அப்படி அழைக்கும்போது அந்நியோன்னியமாக நெருக்கமாக உரிமையாக உணர முடிகிறது. ஆகவே அப்பவும் சரி, இப்பவும் சரி, நட்பின் விளிப்பை ஒருமையில் அழைத்தே........... களித்திருக்கிறேன். தோழிகளை வா... போ... என்ற ரீதியில் அழைத்து பழகியிருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் அவர்... இவர்..... என்று மரியாதையாக என்னை குறிப்பிடும் போதும் விளிக்கும் போதும் ஒவ்வாமையாக உணர்ந்திருக்கிறேன்.
பிரியபூமியில் மரியாதை தோலி உரிக்கப்பட்ட நட்பின் விதைகள் தான் வேரூன்றி தோழமை விருட்சமாக வளரும்.

கிருஷ்ணமூர்த்தியும் சீனிவாசனும்  தற்சமயங்களில் எனக்கு அனுப்பும்  மின்னஞ்சல்களில் மரியாதையுடன் குறிப்பிடுவார்கள்.  அப்படியெல்லாம்  என்னால் என் நண்பர்களை தோழிகளை மரியாதையாக குறிப்பிட்டு எழுதுவது மிகக்கடினம். என் நண்பர்களிடம் உரிமையெடுத்துக்கொள்ளாமல் வேறு யாரிடம் எடுப்பது? ஆகவே சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது யாதெனில் .....இந்த நினைவலைகளில் தோழர்கள் மற்றும் தோழிகளை முழுக்க முழுக்க ஒருமையில் விளித்து தான் எழுதுவேன், பொறுத்துக்கொள்ளவும்.

கல்லூரியில் தோழர்கள் கூட்டம் வெகுவிரைவில் சேர்ந்துவிட்டது. தோழிகள் வட்டம் சேர்வதுதான் ரொம்ப சிரமமாகயிருந்தது. அப்போதுள்ள காலகட்டத்தில் ஆண், பெண் நட்பென்பது கொஞ்சம் குதிரை கொம்புதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் கண்டிப்பு.., மற்ற வகுப்பு மாணவர்களின் படையெடுப்பு, சட்டென்று பேசிக்கொள்ளமுடியாதபடி கூச்ச மனப்பான்மை என்று எண்ணிறந்த இடர்பாடுகள். அந்த சமயத்தில் தான் தோழிகளின் நட்புவட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைவதற்கான முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது.


1984 ம் வருடம் அக்டோபர் 31-ம் தேதி புதன் கிழமை வழக்கம்போல் காலை துயிலெழுந்து, நண்பர்கள் சகிதம் பஸ்ஸில் பயணித்து, கல்லூரியின் வகுப்பில் குழுமியிருந்தோம். இரண்டு பீரியட் முடிந்து முன்றாவது பீரியட் நடந்துகொண்டிருந்த சமயம் தீடிரென்று கல்லூரி முழுவதும் பதட்டமான சூழ்நிலை பரவியது. பரபரப்புடன் மாணவர்களும் பேராசிரியர்களும், கல்லுரி ஊழியர்களும் அங்கிங்கும் இங்கங்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். அளவிற்கதிகமான காலடி ஓசைகளும் பேச்சு சப்தங்களும் ஏதோவொரு வேதனையான செய்தியை அறிவிப்பதுபோல் உணர்ந்தோம். கடவுளே....!  நாங்கள் நினைத்தது போலவே...!  அந்த பெரும் வேதனையான செய்தி எங்களையும் வந்தடைந்தது. ஜவஹர்லால் நேரு அவர்களின் அருமை புதல்வி, இந்தியாவின் முதல் பெண்பிரதம மந்திரியான திருமதி.இந்திராகாந்தி அவர்களை அவருடைய மெய்காப்பாளர்களே...! .......? ...........?...............மிஷின் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்கள் என்பதுதான் அந்த கொடிய செய்தி.

நேரு அவர்களின் குடும்பத்தார்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் ராஜகம்பீரமான முகப்பொலிவு, ரோஜாப்பூ நிறம் ஆஹா.......! பார்க்க ....... பார்க்க ....   சந்தோஷமாகயிருக்கும். அதுவும் திருமதி.இந்திராகாந்தி அவர்கள் மதுரை விஜயம் செய்தபொழுது நேரிலே பார்த்திருக்கிறேன்.  இப்பொழுதுள்ள மாதிரி குண்டுதுளைக்காத வாகனம், மந்திரிகளைச் சுற்றி ஆயிரத்தெட்டு போலீஸ் காவலென்றில்லாமல் வெள்ளமாகத்திரண்டு நிற்கும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஊர்ந்து செல்லும் திறந்த ஜீப்பில் அநாயாசமாக நின்று கொண்டு இன்முகத்துடன் ரோஜா மாலைகளை மக்களை நோக்கி வீசியவண்ணம் அவர்கள் வந்து சென்ற காட்சி ...........! என்னுள் நிழலாடி வருத்தத்தை இன்னமும் அதிகப்படுத்தியது.  எப்பேர்ப்பட்ட மாதரசி .....! ராஜகுமாரியாய் வாழ்ந்தவர்கள்.  தைரியத்தில் தன்னிரகற்று விளங்கியவர்கள் ..   அடடா.......! செய்தியடைந்ததும் பாடங்கள் நிறுத்தப்பட்டன. கல்லூரியின் கதவுகள் பாதுகாப்புக்கருதி மூடப்பட்டன. கல்லூரியிலுள்ள ரேடியோக்களைச்சுற்றி கூட்டம் கூடியது.  தொலைபேசியில் அழைப்புகள் வந்தவண்ணமும் .........சென்றவண்ணமுமிருந்தது ..... இனம்புரியாத கலக்கம் எல்லோர் முகத்திலும் தொற்றிக்கொண்டது. மதுரை மாநகரின் எல்லையில் எங்கள் கல்லூரியிருந்ததாலும் அதிகபெரும்பான்மையான மாணவர்களும் பேராசிரியர்களும் நகரின் உள்ளே வசிப்பதாலும்  நகர்மத்தியில் என்ன நிலவரம் ...? என்பதை தெரிந்து கொள்வது மிக மிக அவசியமானதாகயிருந்தது. அதற்கு தொலைபேசி பேருதவி புரிந்தது.  வந்த விபரங்களெல்லாம் பயத்தையும் பதட்டத்தையும் இன்னும் அதிகரிப்பதாகத்தானிருந்தது. மதுரை மாநகரின் மொத்தப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது கலவரம் ஏற்ப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில்....., தனியார் போக்குவரத்தும் சுத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது. பஸ், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என நகரின் அனைத்து இயக்கங்களும் மௌனமாக்கப்பட்டு விட்டது......! என்பதை அறிந்ததும் கல்லூரிமுதல்வர் அறையில் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் கூடி விவாதித்தார்கள். இறுதியில் கல்லூரி முதல்வர் மறைந்த பிரதமரின் ஈமக்கிரியைகள் 02.11.1984 வெள்ளிக்கிழமை நடைப்பெறவிருக்கின்ற காரணத்தை முன்னிட்டு அந்த வாரத்தின் மீதியுள்ள நாட்கள் அனைத்தும் விடுமுறையென அறிவித்தார். மேலும் கல்லூரியிலிருந்து பகுதி பகுதியாக மாணவர்கள் வெளியேறும்படியும் எங்கள் வகுப்பு மாணவிகள் பேராசிரியர்களின் பாதுகாப்போடு கடைசியாக வெளியேற வேண்டுமென்றுப் பணித்தார்.  முதல்வரின் கட்டளைப்படி மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கல்லூரியிலிருந்து வெளியேற துவங்கினர். நாங்கள் கொண்டுவந்திருந்த மதிய உணவை சாப்பிட்டு விட்டுக் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் மொத்தக் கல்லூரியும் வெறிச்சென்றாகிவிட்டது. சாந்தா மேடம், பாலகிருஷ்ணன் சார், மோகன் சார் மற்றும் சில பேராசிரியர்கள் சகிதம் மாணவிகள் புடைசூழ.........! எங்கள் நட்பு வரலாற்றின் மிகப்பெரும் திருப்புமுனையாக....! அமைந்த மதுரை நகர் பாதயாத்திரையை’ துவக்கினோம். சுஜாதா அவர்களின் சிறுகதை ஒன்றில் கதாநாயகனுக்கு ஆராய்ச்சி மோகம் கொண்ட டாக்டர் இளமை டானிக் என்று சொல்லி ஒன்றைக்கொடுத்து அதனை குடிக்கச்சொல்வார். அதைக்குடித்ததும் கதாநாயகன் தேசியக்கொடிபோல் உணர்ந்தேன்......... என்பான். அந்த டானிக்கைக்குடித்ததும் வாயில் புளிப்பாகவும் தொண்டையில் துவர்ப்பாகவும் நெஞ்சில்  காரமாகவும் இருக்குதென்று காரணம் சொல்வான்.  எனக்கும் அதேபோலிருந்தது.  மாணவிகள் சகிதம் மதுரைவரை நடந்தே போகப்போறோமே.... என்று சந்தோஷமாகவும், உயர்ந்த அந்தஸ்திலுள்ள திறமையான வயதான பெண்மணியை துடிதுடித்து மரணிக்கும்படி வைத்துவிட்டார்களே .... என்ற வருத்தத்தோடும்,  ரொம்பதூரம் நடந்து செல்ல வேண்டும் மாணவிகள் வேறு கூடவருகிறார்கள் அசம்பாவிதம் எதும் நடந்துவிடக்கூடாதே....!  என்ற கலக்கத்தோடும்  இருந்தேன்..

கல்லூரியை விட்டு வெளியேறி மூலக்கரையைத் தாண்டி பிரதான சாலை வழியாக மதுரை நகரை நோக்கி எங்கள் நத்தை நடைபயணம் தொடர்ந்தது. பரபரவென்றிருக்கும் சாலைகளெல்லாம் படு மௌனமாகயிருந்தது. கார்கள், வண்டிகள் இல்லாமல் ஓசையில்லாத சாலைகளில் நடந்து செல்லும் போது இதயத்தின் ஓசை அதிகமாகியது.  வழியெங்கும் பெரும்பாலான வீடுகளின் வாசலில் மறைந்த பிரதமரின் புகைப்படத்திற்கு மாலையணிவித்து ஊதுபத்தி குத்தி வைக்கப்பட்டிருந்தது. சிலவிடங்களில் பெண்கள் ஒன்றாகக்கூடி ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். எல்லாக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மறைந்தபிரதமரின் விபரங்கள் அடங்கிய ஏராளமான செய்தித்தாள்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருந்தது. கலவரம் எதுவும் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மதுரையை பொறுத்தமட்டில் காந்தியவழியிலேயே மக்களும் தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் செய்தித்தாள்களில் எல்லாம் டெல்லியிலும் மற்றும்  வடமாநிலங்களிலும் நடந்துக்கொண்டிருக்கும் கலவரங்களைப்பற்றியும் மூவாயிரத்திற்கும் அதிகமாய் பலியாகிய சீக்கிய இனத்தாரைப்பற்றிய விபரங்களும் தான் குவிந்திருந்தது. பாரததேசமே பற்றி எரிந்துக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றாக உணரமுடிந்தது. மாதரசி இந்திராகாந்தி அவர்கள் தனது மரணத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்திய தேசமக்களின் உணர்வுகளையும்  ஒன்றுப்படுத்தி அவர்களின் மனதைவிட்டு என்றென்றும் அகலாத ஜீவனாக மாறிப்போனார்கள். சீனாவில் ஒரு பழமொழி உண்டாம் நமது மரணம் இறகு போல் இருக்கக்கூடாது தாய் மலை போல் இருக்கவேண்டும் தாய் மலை சீனாவிலுள்ள மிகப்பிரமாண்டமான மலையாகும். திருமதி.இந்திராகாந்தி அவர்களின் மரணமும் தேசத்தின் மிக முக்கிய நிகழ்வாகி .......அந்த மாபெரும் விருட்சம் சாய்ந்த பொழுது பாரத தேசமே மிகப்பெரும் அதிர்ச்சிகளை சந்தித்தது.

நாங்கள் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது எங்களை கடந்து சென்றவர்களின் முகங்களிலெல்லாம் உண்மையான வருத்தம் தெரிந்தது. ஆர்வலர் புண்கனீர் பூசல் தரும். தங்கள் குடும்பத்தில் ஒருமரணம் நிகழ்ந்தால் எத்தகைய மனவேதனையில் இருப்போமோ..?  அதே மனநிலையில் தான் மொத்த தேசமும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய பன்னிரண்டு  முதல் பதினைந்து கிலோமீட்டர் தூரம் வரை நடந்திருப்போம். சுமார் மூன்றுமணி நேரம் நடந்திருப்போம். மெதுவாகத்தான் நடந்துவந்தோம். மாணவிகளை நடுவில் வரும்படி செய்து மாணவர்கள் நாங்கள் முன்னாடியும் பேராசிரியர்கள் பின்னாடியும் அணிவகுத்து நடந்துவந்தோம். எங்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  நடந்துவந்த கால்வலியில் எங்கள் எல்லோர் முகமும் சோகமாகவேயிருந்தது. எந்த அசம்பாவிதமும் இல்லாமல் எங்கள் பயணம் அமைதியாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் அழகப்பன் நகர் தாண்டி பழங்காநத்தம் வரும் சமயம் ஒருஇடத்தில் விஜி ப்ளாட்பாரத்தில் ஏறி கடந்து செல்லும் போது பைத்தியம் ஒன்று அவள் கன்னத்தில் அறைந்துவிட்டது. அந்த விஷயம் கூட.....! அவள் சொல்லிதான் எங்களுக்குத்தெரிய வந்தது.  அவள் பாவம் ...! அழக்கூட முடியாமல்...... அதிர்ச்சியிலும் அவமானத்திலும் ரொம்பவும் சங்கடப்பட்டாள். அதற்கு அப்புறம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பயணம் தொடர்ந்தது.

பெரியார்நிலையம் வந்ததும் எங்கள் கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பிததது. நாகராஜன், மகாதேவன், ராமகிருஷ்ணன், ரமேஷ், ஜெயலலிதா, லலிதா,  கிருஷ்ணமூர்த்தி  எங்களிடமிருந்து பிரிந்து வேறு பாதையில் சென்றனர். தெற்குவாசல், தவிட்டுசந்தை, கீழவாசல் என்று வந்ததும் மாணவ மாணவிகள் கூட்டம் பெருமளவிற்கு குறைய ஆரம்பித்தது.  இறுதியாக விஜியும், சாந்தியும் கே.கே.நகர் செல்லவேண்டியிருப்பதால் அவர்களுக்கு துணையாக குழந்தைவேலும், பேராசிரியர் பாலகிருஷ்ணன் அவர்களும் செல்ல சீனியும் நானும் வீட்டையடைந்தோம்.

மாணவிகள் வீட்டிற்கு விஜயம் செய்யும் வைபவத்தின் துவக்கத்தை அன்று குழந்தைவேலு ஆரம்பித்துவைத்தான்.


இன்னும் உலா வரும்................

17 comments:

  1. கடிதங்களில் பிறருக்குக் குறிப்பிடும் பொழுதே மரியாதை சொற்கள் இருக்கும். அது பொது நாகரீகம் கருதி எழுதுவது. நாகராஜனைக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் முதலில் அவர் என்று குறிப்பிட்டு இருப்பேன், ஆனால் அடுத்த வரியில் அது அவன் ஆகி இருக்கும். அது சந்தோஷப் பிழை. இனிப் பொதுவிலும் ஒருமையில் குறிப்பிடுகிறேன், மகிழ்ச்சி தரும் என்பதனால். மகிழ்வித்து மகிழ்

    ReplyDelete
  2. எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க!!

    ReplyDelete
  3. the reason of respect is they r expecting u for donation.

    ReplyDelete
  4. துவக்கத்தில் அன்வர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன் ஏனென்றால் இதை பல முறை நானும் உணர்ந்திருக்கிறேன். அப்படி மரியாதையாக அழைக்கும்போது அந்நியப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுவது உண்மை. இதை விட இப்படி மரியாதை கலந்து வரும் மின்னஞ்சல் மற்றும் SMS ற்கு பதில் எழுதும்போது தர்ம சங்கடமாகி விடும், நம் பாணியில் சாதாரணமாக எழுதுவதா, பதில் மரியாதை தெரிவிப்பதா என்று.

    சில சமயம் நாம் சொல்ல நினைத்த சொல்லத் தயங்கும் விஷயங்களை மற்றொருவர் சர்வ சாதாரணமாக விளக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. மனதை உறுத்திய இந்த விஷயத்தை சரியான நேரத்தில் போட்டு உடைத்த(?!!) அன்வருக்கு பாராட்டு மற்றும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. this is fact becoz the singular form of calling get intimate feeling.

      Delete
    2. whenever we would like to express our feeling in writing or any form show it as it has. becoz our thingking has took different shape in our feelings. so, i would like to take this previlage to appreciate anvar.24 for this matter

      Delete
  5. இந்த சம்பவம் என்னாலும் மறக்க முடியாத ஒன்று.

    எனக்கு கொஞ்சம் adventure என்றால் பிடிக்கும். காலேஜிலிருந்து வீடு வரை நடந்தே அதுவும் அந்த அவசர நிலையில் போகிறோம் என்று thrilling ஆக இருந்தது. பாதி வழியில் என்னை off பண்ணுகிற மாதிரி எதிர்ப்பாராத விதமா என் எதிரில் ஒரு ஆள். அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு அருகில் என்னை நேருக்கு நேர் பார்த்தபடி. அது யார் ஏன் இப்படி நிற்கிறான் என்று யோசிப்பதற்குள் கன்னத்தில் இறங்கியது ஒரு இடி. பொறி கலங்கியது போல் இருந்தது. சுதாரிப்பதற்குள் ஆள் அம்பேல். அதிர்ச்சியில் யாரையும் கூப்பிடுவதற்கு கூட தோன்றவில்லை எனக்கு. எந்த ஜென்மத்துக் கடனோ, கொடுத்துவிட்டுப் போய்விட்டான் மகராசன்.

    ஆனால் நம் நண்பர்கள் உடனே அருகிலிருந்த கடையிலிருந்து தண்ணீர், ஜூஸ் தந்து என்னை ஆறுதல் படுத்தினார்கள்.

    Thrill என்றால் அதற்காக இப்படியா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் ஞானிகள் இருவர் சந்தித்து கொண்டால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொண்டேன்.

      Delete
    3. எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லையே.

      Delete
    4. நீயும் அந்தப் பைத்தியமும் ஞானியாம். (அப்பாடி விஜிய ஞானின்னு சொல்லிட்டேன்.)

      Delete
    5. கேக்காமலே இருந்திருக்கலாமோ!

      Delete
  6. aana avan solla vandhadhu neeyum athuvum paithiyam enbathe.

    ReplyDelete
    Replies
    1. facebook comment ல் "நான் சொல் நீ பொருள்" என்று நாகு என்னைச் சொன்னது விஜிக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

      Delete
    2. ஆனாலும் பதில் எழுதுவதில் உங்களுடைய கடமை உணர்ச்சியையும், promptness ஐயும் மிக மிக பாராட்டுகிறேன். ரொம்ப நாளா சொல்ல நினைச்சது போல!!

      Delete
  7. டாக்டர் ‘இளமை டானிக்’ என்று சொல்லி ஒன்றைக்கொடுத்து அதனை குடிக்கச்சொல்வார். அதைக்குடித்ததும் கதாநாயகன் ‘தேசியக்கொடிபோல் உணர்ந்தேன்’......... என்பான். அந்த டானிக்கைக்குடித்ததும் வாயில் புளிப்பாகவும் தொண்டையில் துவர்ப்பாகவும் நெஞ்சில் காரமாகவும் இருக்குதென்று காரணம் சொல்வான். எனக்கும் அதேபோலிருந்தது. மாணவிகள் சகிதம் மதுரைவரை நடந்தே போகப்போறோமே.... என்று சந்தோஷமாகவும், உயர்ந்த அந்தஸ்திலுள்ள திறமையான வயதான பெண்மணியை துடிதுடித்து மரணிக்கும்படி வைத்துவிட்டார்களே ....


    என்ன எழுத்துத் திறமை நமது நண்பர்க்கு,என்ன உதாரணம். மனதுக்கு மகிழ்ச்சி.ஆதரவு தருவோம்.சுஜாதா போல வர என் வர்ழ்த்துக்கள்.
    எழுத்து நடை பிரமாதம். என் கணவர் கூட மிகவும் விரும்பி ,ரசித்து படித்தார்.

    ReplyDelete
    Replies
    1. Welcome RJ (Jey)!

      லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான (டேஸ்டான) comment.

      இதை விட எழுத்தாளருக்கு வேறு என்ன வேண்டும்?

      சிறு துளி பெரு வெள்ளமாய் சிறுக சிறுக ரசிகர் கூட்டம் பெருக அன்வருக்கு வாழ்த்துக்கள்!!

      Delete

Link