நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை அமெரிக்கா மக்கள் எப்படி பேட்டி மேல் பேட்டி
எடுத்திருப்பார்களோ ..? அந்தளவிற்கு முதன்முதல் மாணவிகள் இல்லத்திற்கு விஜயம்
செய்த குழந்தைவேலுவிடம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு விபரங்களைக் குடைந்தெடுத்தோம்.
அந்தசமயத்தில் அவன் எங்களுக்கு ஒரு கொலம்பஸாகவே.... தெரிந்தான்..!
எத்தனை நாள்தான் அவன் மட்டும் மாணவியர்
இல்லத்தில் டீ சாப்பிட்டு வந்ததை
கேட்டுக்கொண்டிருப்பது..? சரி ... நாமும்
களத்தில் இறங்கி காப்பி சாப்பிட முடிவு செய்தோம்.
ஒரு நன்னாளில் மறைந்து
கொண்டிருக்கும் மாலைப்பொழுதின் சமயத்தில் குழந்தைவேலு வழிநடத்த சீனிவாசன்,
நாகராஜன், மகாதேவன் சகிதம் “FIVEMEN ARMY’ ஆக கே.கே.நகரில்
வசித்த விஜி, சாந்தி இல்லத்தை நோக்கி எங்களின் கோலாகல மற்றும் பக் ....பக்
....திக் ...திக்....
பயணத்தைத்தொடங்கினோம். நூறாண்டு காலத்திற்கும் மேலாக வைகை ஆற்றின் மேல்
கம்பீரமாக தனது சேவையை புரிந்துவரும் ஆல்பர்ட் விக்டர் பாலத்தைக் கடந்து, பெரிய
ஆஸ்பத்திரி என்றழைக்கப்படும் அரசு பொதுமருத்துவமனையை கடந்து, கலெக்டர் ஆபிஸை
கடந்து, ஆவின் பால் நிறுவனத்தின் பிரமாண்டமான வேலிகளைப்பார்த்துக்கொண்டே
இடதுபுறமாக திரும்பி, வக்போர்ட் கல்லூரிவரை விரைவாக வந்துகொண்டிருந்த எங்கள் பயணம்
மாணவியர் வீட்டிற்கு சமீபத்தையடைந்ததும் கொஞ்சம் தடுமாறியது. அந்தகாலக்கட்டத்தில்
மாணவியர் இல்லங்களுக்கு மாணவர்கள் விஜயம் செய்வதொன்றும் அவ்வளவு இலகுவான
காரியமல்ல. கூடப்படிக்கும் மாணவர்களென்றாலும் பெற்றோர்களின் மனநிலை
எப்படியிருக்கும் ...? நமது மாணவியர் என்ன நினைப்பார்கள் ..? கல்லூரியில் கூட அதிகமாகப் பேசிக்கொண்டதில்லை.
திருமதி.இந்திராகாந்தியவர்களின் மறைவு சமயத்தில் மூன்றுமணிநேரம் பாதுகாவலர்களாக
கூடவே வந்திருக்கிறோம் அவ்வளவுதான்.. எங்கள்
படையில் ரொம்ப தைரியமாகயிருந்தது நாகு மட்டும் தான்.. !
அவனுக்கு சாந்தியையும் அவள் குடும்பத்தாரையும் கல்லூரிக்கு முன்னரே தெரியும். நாகு வீட்டிற்கு
பக்கத்தில் தான் அவர்கள் ஆரம்பத்தில் குடியிருந்தார்களாம். சாந்தியின்
அண்ணண்மார்களெல்லாம் நாகு, மகாதேவனுக்கு நண்பர்களாகவும்
இருந்திருக்கிறார்களாம். ஆகவே அவன்
வழக்கம் போல் அலட்டிக்கொள்ளாமல் அடுக்கடுக்காய் ஜோக்குகள் அடித்தவண்ணம்
வந்துகொண்டிருந்தான். குழந்தைவேலு அனுபவசாலி அவ்வளவாய் பதட்டமில்லை. மகாதேவன் மனதில் என்ன இருந்ததென்பது ..? அந்த
மகாதேவனுக்கே வெளிச்சம்..! சீனி அவ்வளவு
சீக்கிரம் நடுங்கி விடமாட்டான். பாக்கி நான் மட்டும் மனமெல்லாம் கிடுகிடுவென பதற
...... உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உதறல்களை ஒளிக்கவும் தெரியாமல் நணபர்கள்
மத்தியில் கேலி பொருளாகவே வந்துகொண்டிருந்தேன்.. என் மனக்கண்ணில் ஓடும்
காட்சிகளெல்லாம் உதறல்களை அதிகப்படுத்துவனவாகவே இருந்தது. “யாரப்பா.... நீங்களெல்லாம், கண்ட நேரத்தில் வந்து கொண்டு ..? கல்லூரி தோழமையை கல்லூரியுடன் வைத்துக்கொள்ள
வேண்டியது தானே.. வீடு வரை ஏன்
வருகிறீர்கள்...? இந்தமாதிரி வசனங்களை
மாணவியர் வீட்டில் சந்தித்தால் என்ன செய்வது என்ற நடுக்கம் தான்
ஆட்டிப்படைத்தது. அதுவும் நாங்கள் கும்பலாக வேறு செல்கிறோம் என்ன
நடக்கப்போகுதோ...? அப்ப எனக்கு உண்மையிலே கண்ணைக்கட்டியது. எந்த தைரியத்தில்
நாங்கள் சென்றோம் ..? என்பதையும் எந்த சக்தி எங்களை செலுத்தியது...? என்பதையும் இப்போது நினைத்தாலும்
ஆச்சரியமாகயிருக்கிறது ..!
ஒருவாறு அத்தனைப்பேரும் மனதைத் திடப்படுத்தி
கொண்டு குழந்தைவேலுவிடம் மாணவியர் வீடு இருக்கும் தெரு என்னவென்பதை மட்டும்
உறுதிசெய்துவிட்டு... அந்தத்தெருவுக்குள் நுழைந்தோம். காலுக்கு கீழே சாலையும் இருபக்கங்களிலும்
விதவிதமான வீடுகளும் ஸ்லோமோஷனில் நகர்ந்துக்கொண்டேயிருந்தது. ஒருவீட்டின் பக்கம் வந்ததும் பல்ப் போட்டது
போல்.. குழந்தைவேலு திரும்பினான். அந்த
வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சாந்தியும் விஜியும்
எங்களைப்பார்த்தவுடன் எந்தவித தயக்கமுமின்றி .....நெடுநாள் பழகியவர்கள் போல
.......முகம்கொள்ளா சிரிப்புடன் மனப்பூர்வமாக வரவேற்றனர். அன்றைக்கு அவர்கள் நடந்துகொண்டவிதம் இப்போது
நினைத்தாலும் பெருமையாகயுள்ளது. முகம்திரிந்து மட்டும் நோக்கியிருந்தால்.....! அது
மிகப்பெரும் வடுவாக மாறியிருக்கும் . நல்லவேளை ... மாலை முற்றிலும் மறைந்து இருள் சூழத்துவங்கிய
அந்த நேரத்தில் ..... எங்கள் நட்பு வானில் பிரகாசமாக வெளிச்சம்
பிரசன்னமாகியது. சாந்தியின் அக்கா மற்றும்
அவளின் குடும்பத்தார் அன்புடன் வரவேற்றனர்.
நாகுவை அவர்கள் குடும்பத்தார்களுக்கு ஏற்கனவே தெரியுமென்பது
ஊர்ஜிதப்படுத்துவது போல் அவனை கொஞ்சம் கூடுதலாகவே நலம் விசாரித்தனர். சாந்தி வீட்டில் சிறப்பாக வரவேற்பு
நடந்துகொண்டிருக்கும் போதே விஜி ‘வாங்க ..! எல்லோரும் எங்க ஆத்துக்கு போகலாம்....’ என்று சொன்னதும்
சாந்தியும் எங்களுடன் சேர்ந்து கொள்ள விஜி வீட்டிற்குச் சென்றோம். அங்கும் எங்களுக்கு அமோகமான வரவேற்பு தான்.....!
அவங்க அம்மா. இன்முகத்துடன்
வரவேற்றார்கள். விஜியின் தந்தையார்
கண்டிப்பானவர் போல் தோற்றமளித்தாலும் ரொம்ப கனிவுடன் எங்களை விசாரித்தார். வேர்க்க
விறுவிறுக்க மலைப்பாதையில் ஏறி கடைசியில் மலையுச்சியை அடைந்து உஷ்....
அப்பாடா....! என்று கீழே உட்காரும் போது......அப்போது குளுமையாக அங்கு வீசும் காற்றில் உடம்பும் மனசும் ஒரு சேர
குளிர்ந்து போகுமே.....! அதே உணர்வை அன்று அடைந்தேன்.
வாழ்க்கையின் பாதையில் இரண்டு விஷயங்கள்
எப்பவும் நமக்குள் மறக்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். அது நாம் யாரால்
அவமானப்படுத்தப்பட்டோம் ..? என்பதும் யாரால் அங்கீகாரம் செய்யப்பட்டோம்
...? என்பதும் தான். அன்று சாந்தி வீட்டிலும், விஜி வீட்டிலும் எங்கள் நட்புக்கு
அங்கீகாரம் கொடுத்து அவர்களின் குடும்பத்தார் நடந்துகொண்ட விதம் மிகுந்த பெருமையாகவும்
பூரிப்பாகவுமிருந்தது.
எங்களை வீட்டின் உள்ளே அழைத்து சென்று
..ஒரு அறையில் பாய் விரித்து அமரவைத்து சம்பிரதாயமாக ஒவ்வொருவராய் விசாரித்தார்கள். அன்று சீனியும் நாகுவும் ரியல் எஸ்டேட்
கம்பெனிகள் அனுப்பும் குறுஞ்செய்தி போல....” நான்ஸ்டாப்பாய்” ஜோக்கடித்தவண்ணம்
இருந்தார்கள். சாந்தியின் சிரிப்பலைகளுடன் சேர்ந்து எல்லோரின் சிரிப்பும்
வீடெங்கும் எதிரொலித்தது. வீட்டின் உள்ளே அமர்ந்ததிலிருந்து வெளியே வரும் வரை அந்த
சிரிப்பலை ஓயவில்லை. இரவு நேரம் தெருவே அமைதி ததும்பவிருக்கும் சமயத்தில் எங்களின்
சிரிப்புசத்தம் மட்டும் திசையெட்டும் பரவியது....! எங்களுக்கு சாப்பிட கொடுப்பதற்காக வீட்டின்
உள்ளே சென்ற விஜி பலகாரத்தட்டுடன் வரும் சமயத்தில் ... சீனி ஒரு சூப்பர்
ஜோக்கடித்தான். அவ்வளவுதான்.. ...
அதைக்கேட்டவுடன் அவளுக்கு வந்த சிரிப்பு இருக்கிறதே....! அவளால் சிரிப்பை அடக்கவேமுடியவில்லை;
வயிற்றைப்பிடித்துக்கொண்டு இரண்டாய் மடிந்து உடைந்துவிடுவாள் போல் பலகாரத்தட்டுடன்
அவள் அப்படியே சரிந்து உட்கார்ந்த காட்சி.... என்றைக்குமே மறக்கமுடியாத ஒன்று.
மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதென்பது அருமையான விஷயம். அந்த நல்ல காரியத்தை சீனுவும் நாகுவும் அன்று
திறம்பட செய்தார்கள். நேரம் போனதே
தெரியவில்லை.! கல்லூரி சம்பவங்கள், பேராசிரியர்கள், சக தோழர்கள் என்று எண்ணிறந்த
விஷயங்கள் விவாதிக்கப்பட்டு சிரிக்கப்பட்டன. இறுதியாக இரவு சாப்பிட்டு விட்டு
செல்லலாமே .... என்று அவர்கள் வீட்டில் கேட்டதும் அன்போடு மறுத்தலித்துவிட்டு
காப்பி பலகாரம் சாப்பிட்ட திருப்தியுடனும் கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும்
மனநிறைவோடும் வீட்டார் அனைவரிடமும் விடைப்பெற்று வெளியேறினோம். .......
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
இங்கு மட்டுமல்ல நாங்கள் அடுத்தடுத்து படையெடுத்த
சித்ரா வீடு, பாலா வீடு, ஞானேஸ்வரி வீடு, ஜெயலலிதா வீடு என்று சென்றவிடமெல்லாம்
சீரும் சிறப்புமாக வரவேற்க்கப்பட்டோம். எங்களை கண்ணியப்படுத்திய பெருமைப்படுத்திய
எங்கள் வகுப்பு மாணவ மாணவியரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான
நன்றியை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து
சிறப்பான வெற்றி பெற காரணமாகவிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களை அந்த நாட்டு
மக்கள் அடுத்த நடந்த தேர்தலில் தோற்கடித்தார்களாம் அதேபோல் மாணவியர் இல்ல
விஜயத்தில் ஆரம்பத்தில் எங்களுக்கு உறுதுணையாக வழிகாட்டியாக இருந்த குழந்தைவேலு ஏனோ.. அதற்கு பிறகு நடந்த எந்த விஜயத்திலும் மற்றும்
விசயத்திலும் கலந்து கொள்ளவில்லை.
உலா தொடரும்......
“ரியல் எஸ்டேட் கம்பெனி குறுஞ்செய்தி” – அன்வரின் comment குறும்புத்தனமான நகைச்சுவைக்கு நல்ல உதாரணம்.
ReplyDeleteஇந்த சம்பவம் எங்கள் நட்பிற்கு ஒரு பிணைப்பாக அமைந்தது என்பது சரியான உண்மை. அந்த நீண்ட நெடும்பயணத்தின் போது அதிகம் பேசிக்கொள்ளாவிட்டாலும் அவர்கள் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் (real bodyguard போல) எங்களோடு நடந்து வந்தது நாங்கள் ரொம்ப காலம் பழகிய ஒரு உணர்வை ஏற்படுத்தியது. மேலும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி (நட்பைத்தவிர) உடனே வீட்டிற்கு வந்தது அந்த உணர்வை உறுதிப்படுத்தியது.
ReplyDeleteநாம் ஜோக்கடித்து சிரித்துக்கொண்டிருந்தது இரவு மணி 9.30 க்கு மேல் என்று நினைக்கிறேன்
Deleteஜெயலலிதாவின் வீடு எல்லீஸ் நகர் முதல் பால் பூத் ஸ்டாப்பில் இருந்தது.நாங்கள் சென்ற பொழுது அண்ணன் வீட்டு வாசலில் பைக் துடைத்துக் கொண்டிருந்தார்.நாங்கள் உடனே வாகா எல்லையை மிதித்து விட்டது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அந்த ரோட்டை ஏதோ கொடைக்கானலின் கோக்கர்ஸ் வாக்கர்களாக மாறி கடந்தோம்.அதற்கு மறு பாதை வழியாக மீண்டும் இந்திய எல்லைக்கே திரும்பிவிடுவோம் என்று முடிவு செய்யும்போது மகாதேவன் தலயை ஆட்டிவிட்டு அங்கும் பாதி தூரம் கடந்தவுடன் இங்கே லலிதாவின் வீடு இருக்கிற்து என்ற பிரமோஸை ஈவு,இரக்கமின்றி ஏவினான்.அப்பொழுது அவனை சீனி பார்த்த கொலவெறி இருக்கிறதே.
ReplyDeleteசீனி பயங்கர டைமிங் ஜோக் அடிப்பவன்.அதைப் புரிந்து கொள்ள அவனை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.இல்லையென்றால் ஒன்றுமே புரியாது. நானும்,அவனும் சிரிக்கும்போது மற்றவர்கள் எங்களை ஏதோ ஒரு வர்க்கத்தில் சேர்த்துவிடுவர்.
ReplyDeleteபெரும்பாலும் நான்,அன்வர்,சீனி டீம் கல்லூரி முடிந்தவுடன் ஒரு தனி சந்திப்பை நாள் தவறாமல் நிகழ்த்துவோம்.அது முடிய இரவு ஒரு மணி வரை ஆகும். அப்பொழுது நாங்கள் சிரிக்கும் சிரிப்பிற்க்கு தெருவே அதிரும்.
ReplyDeleteதோழிகளில் அமைதிக்கு மறுபெயராக பாலா, படிப்பு+style என்று யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ளாத சாந்தி, மௌனப்புன்னகை, மென்மையான பேச்சு என்று மிதமான குணத்தோடு சித்ரா, சிறிது ரௌத்ரம், படபடப்பு, எப்பொழுதும் alert என்று சற்றே வித்தியாசமாக ஞானி இருக்க, தோழர்களில் சிரிக்க சிந்திக்க என்று ஒரு விஷயத்திலேயே இரண்டையும் கலந்து தருவதில் expert ஆக நாகு, சிரிப்பதற்கென்று நேரங்களைத் தனியாக செலவிட விரும்பாமல் சிரித்துக்கொண்டே பேசும் அன்வர், குறும்புக்கு மறுபெயர் நான் என்பது போல் முகத்தில் எப்பொழுதும் தாண்டவமாடும் குறும்புடன் வளைய வரும் மஹாதேவன், கலகலப்பும் கலாட்டாவாகவும் சீனி என்று நமது நட்பு நவரசங்களின் தத்துவத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு.
ReplyDelete